வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக சத்துவாச்சாரி பகுதியில் பாதாள சாக்கடைப் பணி நடைபெற்றது.
ஆனால் இப்பணிக்காகத் தோண்டப்பட்ட சாலைகள் இன்றுவரை சரிவர சீர்படுத்தப்படவில்லை என்றும் இதனால் பொதுமக்கள் இடருக்குள்ளாகின்றனர் எனவும் வேலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக நேற்று (செப். 22) ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் சஜின் குமார், "வேலூர் மாநகராட்சிக்குள்பட்ட சத்துவாச்சாரி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் என்று கூறி ஓரளவிற்கு நன்றாக இருந்த சாலைகளை முற்றிலுமாகச் சேதப்படுத்தவிட்டனர்.
தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதனால் பாதிப்புக்குள்ளாகிறார்கள். அதிகமான சாலை விபத்துகளும் ஏற்படுகின்றன. இதைச் சரி செய்யக்கோரி வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரனிடமும், உதவி ஆணையர் மதிவாணனிடமும் பலமுறை எங்கள் கட்சி சார்பாக புகார் அளித்தோம்.
ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மிகவும் அலட்சியத்துடனும், மெத்தனப்போக்குடனும் செயல்பட்டுவருகின்றனர். மேலும் பாதாள சாக்கடை திட்டத்திற்காக நன்றாக வளர்ந்த மரங்களை எல்லாம் வெட்டி சாய்த்து சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் மாநகராட்சி செயல்பட்டுவருகிறது.
இப்போக்கை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்" என்றார். இவற்றை போர்க்கால அடிப்படையில் விரைந்து சரிசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கைவைத்தார்.