அறிமுக இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர் ரிச்சர்ட் நடிப்பில் உருவாகியுள்ள படம் திரௌபதி. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. டிரெய்லரில் ஒரு குறிப்பிட்ட கட்சித் தலைவர் மற்றும் சமூக இளைஞர்களை தவறாகச் சித்தரிப்பது போன்றும், சாதியைத் தூக்கிப் பிடிக்கும் வண்ணமும் இருந்தது. டிரெய்லருக்கு எதிராகவும், ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் பதிவுகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், இப்படத்தை வெளியிடுவதை அனுமதிக்கக் கூடாது என்று தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், சென்னை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனிடம் புகார் மனு அளித்துள்ளார். தற்போது, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரில் உள்ள 9 திரையரங்குகளிலும் திரௌபதி திரைப்படத்தை திரையிட வேண்டாம் என்று மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள், மேலாளர்கள் ஆகியோரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் சந்திரன் தலைமையில் அக்கட்சியினர் மனு அளித்தனர்.
அந்த மனுவில், "திரௌபதி திரைப்படத்தில் எங்கள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் குறித்தும், அவர் சார்ந்துள்ள சமூகத்தைப் பற்றியும் இழிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. படம் வெளியானால் சாதி மோதல்கள் உருவாகும் சூழ்நிலை உள்ளது. அதனால் படத்தை ஆம்பூரில் உள்ள திரையரங்குகளில் திரையிட வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: