வேலூர்: குடியாத்தம், கொண்ட சமுத்திரம் பகுதியில் பலமனேரி சாலையில் கல்பனா என்பவர் தையல் வேலை செய்து வருகிறார். இவர் சிறுக சிறுக சேகரித்த பணத்தில் தனது மகளுக்காக ரூ.30 ஆயிரம் மதிப்பிலான வைரக்கம்மலை வாங்கி தீபாவளி நோன்புக்குப் பூஜை செய்வதற்காக சாமி படத்தின் முன் வைத்துள்ளார்.
இன்று(அக்.26) காலை பழைய பூக்களுடன் சேர்ந்து வைர கம்மலையும் சேர்த்து அவரது மகள் குப்பையில் கொட்டியுள்ளார். இதனையடுத்து குடியாத்தம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் அந்த குப்பையைப் பெற்றுச் சென்றுள்ளனர்.
இதனிடையே சாமி அறையில் சென்று பார்த்த கல்பனா வைர கம்மல் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து தனது மகளிடம் கேட்ட பொழுது அவர் தற்போது தான் வீட்டிலிருந்த குப்பையை நகராட்சிக் குப்பை வண்டியில் கொட்டியதாகத் தெரிவித்தார்.
உடனடியாக குடியாத்தம் நகர் மன்ற தலைவர் சௌந்தர்ராஜனை செல்போனில் தொடர்பு கொண்ட கல்பனா நடந்தவற்றைக் கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர் மன்ற தலைவர், நகராட்சி பணியாளர்களுக்கு செல்போனில் இது குறித்து தகவல் தெரிவித்தார்.
மேலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வண்டியில் சோதனை செய்த போது வண்டியில் குப்பைகளுக்கு நடுவே இருந்த வைர கம்மலை மீட்டு உரிமையாளர் கல்பனாவிடம் வழங்கினார். குப்பை வண்டியில் குப்பைகளுடன் கொட்டப்பட்ட வைரக்கம்மல் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:அமிர்த பெருவிழா: ஈநாடு குழுமம் தயாரித்த புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்