சென்னை: பாஜக ஆட்சியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை விளக்கும் விதமாக, மே 30ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சாதனை விளக்க பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா அருகே கந்தநேரியில் ஜூன் 8ஆம் தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 8ம் தேதி சென்னை வருகிறார்.
டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வரும் அவர், சென்னையில் இருந்து வேலூருக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். இதற்கான பாதுகாப்பு ஆய்வுகளும், சோதனைகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த பொதுக்கூட்டத்தை பெரிய அளவில் நடத்த பாஜகவினர் தயாராகி வருகின்றனர்.
2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் மத்திய பாஜக மிகவும் கவனம் செலுத்தி வருகிறது. அதனால், நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி பணிகள், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை போன்றவற்றில் தீவிரம் காட்டி வருகின்றனர். அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்சி அமைத்த நிலையில், மூன்றாவது முறை அதிக எண்ணிக்கையிலான இடங்களில் வெற்றி பெற்று மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என்பதில் பாஜக தலைவர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததால், அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற அக்கட்சி கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, தெலங்கானாவில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்தார்.
பாஜக கூட்டணியில் இருந்து 2018ஆம் ஆண்டு வெளியேறிய சந்திரபாபு நாயுடு, மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. நேற்றைய தினம் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இதே போன்று தமிழகத்திலும் பாஜக பல்வேறு வியூகங்களை கையில் எடுத்துள்ளது. தற்போது நடத்தப்படும் பொதுக்கூட்டம் பாஜகவின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் என்பதை கடந்து, இது நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னெடுப்பாகவே பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கூட்டணி கட்சிகளின் நகர்வுகளை பாஜக தலைவர்கள் மிக தீவிரமாக கவனித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்னையில் டெல்லி பாஜக தலைவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். ஜூன் 7ஆம் தேதி தஞ்சாவூரில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் மகன் திருமண விழாவில் சசிகலா, ஓபிஎஸ் சந்திப்பு நிகழவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பு நிகழ்ந்தால் மீண்டும் அனைவரும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.