வேலூர் மாநகரின் முக்கிய பஜார் பகுதியான மண்டித்தெருவில் 100 வருடம் பழமைவாய்ந்த அரச மரம் இன்று (செப்டம்பர் 5) வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில், இருவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்கு இருசக்கர வாகனங்கள், ஒரு கார் சேதம் அடைந்துள்ளது. சாலை நடுவே மரம் விழுந்ததால், மண்டித்தெருவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து நிகழ்விடம் விரைந்த வேலூர் தீயணைப்புத் துறையினர், 6 மணி நேர போரட்டத்துக்கு பிறகு மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால் மண்டித்தெரு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வேலூரில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாகவும், மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை, மின்சார கேபிள்கள் அமைக்க தோட்டப்பட்டுள்ள கால்வாயினால் பிடிமானம் இல்லாமல் மரம் சாய்ந்ததாக மண்டித்தெரு வியாபாரிகள் குற்றஞ்சாட்டினர்.
மேலும் இப்பகுதியில் உள்ள மற்ற மரங்களும், மின் கம்பங்களும் ஆபத்தான நிலையில் உள்ளதால் அதனை சீரமைக்கவும் வேலூர் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.