தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் அனைத்து கடலோர மற்றும் அதிக வெள்ள பாதிப்பிற்கு உள்ளாகும் மாவட்டங்களுக்கும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ள வெள்ள மீட்பு உபகரணங்களை உபயோகிப்பது குறித்து, அந்தந்த மாவட்ட காவலர்களுக்கு அடிப்படை பேரிடர் பயிற்சி அளிப்பட்டுவருகிறது.
தமிழ்நாடு காவல் துறை தலைவர் திரிபாதி உத்தரவின் கீழ், அதிதீவிரப்படை வழிகாட்டுதலின்படி வேலூரில் இன்று (அக்.20) வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து கோட்டை அகழியில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் மீட்பு படகை (Rescue Boat) கொண்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்க வேண்டும், அவர்களை எப்படி பிடித்து படகில் உள்ளே தூக்குவது, படகிலிருந்து வெள்ள நீரில் இறங்கும் முறை மற்றும் படகு கவிழ்ந்தால் எப்படி படகை பழைய நிலைக்கு திருப்பி மீட்பு பணியை தொடர்வது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
முன்னதாக நேற்று (அக்.19) வெள்ள மீட்பு பகுதிகளில் ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு மருத்துவ முதலுதவி அளிப்பது, மரம் வெட்டுவது, மரம் வெட்டும் இயந்திரம் (Carbide Tip Chainsaw), டவர் லைட்(Tower Light) போன்ற இயந்திரங்களை கையாளும் முறை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
சார்பு ஆய்வாளர் ரமேஷ் மற்றும் வெள்ள மீட்பு பயிற்சி பெற்ற 5 பயிற்சியாளர்களை கொண்டு இப்பயிற்சி அளிக்கப்பட்டது. வேலூர் மாவட்ட எல்லைக்குள்பட்ட வெள்ள மீட்பில் ஆர்வம் கொண்ட காவலர்கள் 60 பேர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க:'தினக்கூலியான ரூ.400ஐ உடனடியாக வழங்க வேண்டும்'- மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் வலியுறுத்தல்!