வேலூர் மாவட்டத்தில், நேற்று மேற்கொள்ளப்பட்ட கரோனா தொற்றுக்கான பரிசோதனை முடிவுகளின் படி, காவலர் பயிற்சி பள்ளியில் பணியாற்றும் காவல் ஆய்வாளர் உள்பட 126 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,249 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை, 357 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இன்று வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களில் பெரும்பாலானோர், வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனையைச் சார்ந்தவர்கள் ஆவர்.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, மாவட்டத்தில் உள்ள ஆறு வட்டங்களில் அதிகபட்சமாக வேலூர் வட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்தபட்சமாக கே.வி.குப்பம் வட்டத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படையில், வேலூர் மாநகராட்சி அதிகப்படியான பாதிப்புகளையும், ஒடுகத்தூர் முதல்நிலை பேரூராட்சி இதுவரை தொற்றே இல்லாத பகுதியாக நீடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.