திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சுங்கச்சாவடி அருகே பெங்களூரில் இருந்து சென்னைக்கு மார்பல்ஸ் ஏற்றிய லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. லாரியை நெல்லையைச் சேர்ந்த சுகுமார் ஒட்டிவந்தார். இயற்கை உபாதையை கழிப்பதற்காக லாரியை சாலையின் ஓரம் நிறுத்தினார்.
அப்போது அங்கு வந்த ஆறுபோ் கொண்ட கும்பல் சுகுமாரை சரமாரியாகத் தாக்கிவிட்டு ரூ.5000, செல்போன், ஏடிஎம் கார்டு உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து தப்பிசென்றனர்.
அப்போது கொள்ளையர்களில் ஒருவர் தனது செல்போனை அங்கு தவறவிட்டு சென்றார். அதை எடுத்து கொண்டு சுகுமார் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்து அந்த செல்போனையும் ஒப்படைத்தார்.
அதை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த செல்போன் புது பூங்குளம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருடையது என்று தெரியவந்து. இதனையடுத்து விஜயகுமாரை பிடித்து விசாரித்த காவல்துறையினர் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தீன தயாளன், மிட்டூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் ஆகியோருடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து மூன்று பேரையும் காவல்துறையினர் கைதுசெய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஒடி தலைமறைவாக இருக்கும் மூன்று பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.