வேலூர்: வேலூர் கோட்டை பெரியார் பூங்காவுக்கு அருகே உள்ள அகழிப் பகுதியில், கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி மூட்டை மிதக்கிறது என போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் மிதந்த மூட்டையை அவிழ்த்து பார்த்துள்ளனர்.
அந்த மூட்டையினுள் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்து, மார்பு பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் சிவப்பு நிற தரை விரிப்பானில் வைத்து, கல்லுடன் கட்டி அகழிப் பகுதியில் வீசப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொலைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு மற்றும் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. மேலும், கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் சுமார் 10,000 நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டதாகவும், இறந்தவரின் புகைப்படம், அடையாளங்களைக் கொண்டு துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு விநியோகித்தும் வந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சந்தேகிக்கும் நபர்களைப் பிடித்தும், தீவிரமாக விசாரணையும் நடத்தப்பட்டு வந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்த விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ஆந்திர மாநிலம் சித்தூர் பெத்தராசப்பள்ளியைச் சேர்ந்த லிக்கு என்கிற செல்லாசிரஞ்சீவி என்பது தெரிய வந்துள்ளது.
இந்த நபரை சென்னையைச் சேர்ந்த அஜித் (21), விக்கி, மாரிமுத்து (21), ஜெயஸ்ரீ (22), வேலூர் பாகாயத்தைச் சேர்ந்த பரதன் (30), அப்பு (24), பத்ரி (23) மற்றும் லட்சுமணன் ஆகியோர் அடித்துக் கொலை செய்து விட்டு, உடலை மூட்டையாகக் கட்டி வேலூர் அகழியில் வீசிச் சென்றது தெரிய வந்துள்ளது.
இதில் மாரிமுத்து, பத்ரி ஆகியோர் வேறொரு வழக்கில் ஏற்கனவே சென்னை புழல் மற்றும் வேலூர் மத்திய சிறையில் உள்ளனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பரதன், அப்பு, ஜெயஸ்ரீ ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள அஜித், விக்கி, லட்சுமணன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது குறித்து வேலூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கூறுகையில், ‘கொலை செய்யப்பட்ட செல்லாசிரஞ்சீவி உள்பட அனைவரும் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். எனினும் அஜித், விக்கி, மாரிமுத்து, ஜெயஸ்ரீ உள்ளிட்ட 8 பேரும் செய்து வந்த திருட்டு குறித்து செல்லாசிரஞ்சீவி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால், ஆத்திரத்தில் செல்லாசிரஞ்சீவியைக் கொன்று மூட்டை கட்டி வேலூர் கோட்டை அகழியில் போட்டுச் சென்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
இதையும் படிங்க:வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு பாடம் கற்பிக்கவே வருமான வரி சோதனை: ஜி.கே.வாசன் கருத்து