திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி இமான்(28). இவருடைய மனைவி பரிதா கடந்த 21ஆம் தேதி பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள் அலைபேசியில் மருத்துவர்களிடம் விவரம்கேட்டு பரிதாவிற்கு பிரசவம் பார்த்துள்ளனர்.
இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இருப்பினும் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட பிறகும் சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம் பாஷா, காங்கிரஸ் நிர்வாகிகள் ஆகியோர் உயிரிழந்த பரிதாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளரிடம் அஸ்லாம் பாஷா பேசுகையில், "பரிதாவின் உயிரிழப்பிற்கு காரணமான மருத்துவர்களின் அலட்சியப் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்" என்றார்.
மேலும், தமிழ்நாடு அரசு இதுபோன்ற சம்பவங்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இச்சம்பவத்திற்கு தீர்வு கிடைக்காவிட்டால் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: மீன் பிடிக்கச் சென்ற மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு