திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் மலை மீது நெக்கனாமலை என்னும் கிராமம் அமைந்துள்ளது. வாணியம்பாடியிலிருந்து வெள்ளக்குட்டை - கொத்தக்கோட்டை கூட்டுச்சாலையில் இருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு மலை மீது ஏறிச்செல்ல வேண்டும். ஆனால் வாணியம்பாடியில் இருந்து கூட்டுச்சாலை வரையில் மட்டுமே தார் சாலை அமைந்துள்ளது.
அங்கிருந்து நெக்கனாமலை பகுதிக்கு செல்ல சுமார் எட்டு கிலோமீட்டர் கரடுமுரடான மண் சாலையும், ஐந்து கிலோமீட்டருக்கு அப்பால் மலையேற்றம் இருக்கிறது. நெக்கனாமலை மலை கிராமத்தில் சுமார் 167 குடும்பங்களும் 587 மக்களும் வசித்துவருகின்றனர்.
இதனிடையே இப்பகுதியைச் சேர்ந்த ரஜினி (27) என்ற இளைஞர் கோவையில் வேலை பார்த்துவந்தார். அங்கு கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார். பின்னர் ரஜினியின் உடல் அவரது ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து உறவினர்கள் சடங்குகள் செய்து தூளி கட்டி நடு இரவில் மலைப்பாதையில் உடலை சுமந்து சென்றனர்.
இது குறித்து முன்னாள் ஏம்.எல்.ஏ.கோவிசம்பத்குமார் கூறும்போது, "அரசியல் வாதிகள் ஓட்டுக்கேட்டு வரும்போது சாலைவசதி ஏற்படுத்தி தருகிறோம் எனக் கூறுகின்றனர். ஆனால் தேர்தலில் வெற்றிபெற்ற பின் இந்தப் பகுதிக்கே வருவதில்லை" என கூறினார்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி இல்லை - இறுதி ஊர்வலம் சென்ற உடல்?