வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூர் அரசு மேல்நிலைபள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஒரு மாணவன் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து உள்ளான். இந்த மாணவன் கடந்த கல்வியாண்டில் 2 மாதம் இடைநிறுத்தம் செய்துள்ளார்.
இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக தமிழக அரசு 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருந்தது. ஆனால் மாணவன் கணேசனிடம் கடந்த ஆண்டு நீ தேர்ச்சி பெறவில்லை என கூறி, மீண்டும் 10 ஆம் வகுப்பு படிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மாணவனும் 10 ஆம் வகுப்பில் தொடர்ந்துள்ளான். தற்போது இந்த கல்வி ஆண்டிற்கான பொதுதேர்வு நடைபெறும் நிலையில், பத்தாம் வகுப்பு தேர்விற்கு மாணவனுக்கு ஹால் டிக்கெட் வந்ததால் அந்த மாணவரிடம் நீ கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று விட்டதால் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வேண்டாம் என பள்ளி தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.
அதிர்ச்சியில் மாணவர்கள்: அரசு பள்ளி நிர்வாகத்தின் மெத்தன போக்கால் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவனை மீண்டும் அட்மிஷன் செய்து பத்தாம் வகுப்பு படிக்க வைத்தது அப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து பள்ளி தலைமையாசிரியர் உட்பட 5 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பட்டா கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் கைது