வேலூர் மாவட்டம் காட்பாடி வன்டறதாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஜானி (33). இவர் மீது ஆள் கடத்தல், கொள்ளை, பணம் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் வேலூர் மாவட்ட காவல் நிலையங்களில் உள்ளன. வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், 2018ஆம் ஆண்டு நிபந்தனை பிணையில் வெளியே வந்தவர் தலைமறைவானார். அதன் பின்பு இவரை பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஜானி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவரது பெயர் என்கவுன்ட்டர் பட்டியலிலும் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனிடையே தலைமறைவாக உள்ள ஜானியை பிடிக்க வேலூர் மாவட்ட எஸ்.பி செல்வகுமார் உத்தரவின் பேரில் 3 சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் ரவுடி ஜானி பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் பெங்களூரு சென்ற தனிப்படை காவல் துறையினர், ஜானி பதுங்கியிருக்கும் இடத்திற்கு சென்றனர். அப்போது, அவர் தப்பிச் செல்ல முயன்றதால், காவல் துறையினர் துப்பாக்கி முனையில் விரட்டி பிடித்து கைது செய்து வேலூர் அழைத்து வந்தனர். ரவுடி ஜானி கைது செய்யப்படும் தருவாயில் காட்பாடியில் உள்ள தனது மனைவியிடம் வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் பேசியுள்ளார்.
அதில், அவர் தன்னை காப்பாற்றுங்கள், என்று கூச்சலிட்டவாறே ஓடும் காணொலி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரவுடி ஜானியை காவல் துறையினர் என்கவுன்ட்டர் செய்ய இருப்பதாகவும், அவரது குடும்பத்தை சித்ரவதை செய்வதாகவும் கூறி கடந்த ஆகஸ்ட் மாதம் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் அழிப்பு: அதிமுகவினர் அடாவடி!