வேலூர்: வேலூர் கோட்டை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் (Jalakandeswarar Temple, Vellore) 400 ஆண்டுகள் வழிபாடு இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், கடந்த 16.3.1981-ல் மீண்டும் வழிபாடு செய்யத் தொடங்கினர். அதன்பின் தினமும் பூஜைகள், வார வழிபாடு, மாதம் மற்றும் ஆண்டு விசேஷ திருவிழா, உற்சவங்கள் என இன்றுவரை சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த கோவிலுக்கு கடந்த மூன்று முறை மகா கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிலையில், 4வது கும்பாபிஷேகம் வரும் ஜூன் 25ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி, ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் உள்பட பஞ்ச மூர்த்திகளுக்கும், கோயில் கலசங்கள், கொடி மரங்களுக்கும் பாலாலயம் செய்யப்பட்டு அனைத்து சந்நிதிகளும் மூடப்பட்டன. இதனைத்தொடர்ந்து, ராஜகோபுரங்கள் உள்பட அனைத்து கலசங்கள், சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளில் உள்ள கொடி மரங்களுக்கு தங்க முலாம் பூசும் வேலைப்பாடுகளும், சுவாமிகளின் வெள்ளிக் கவசங்களை மெருகேற்றும் பணியும் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கோயில் தலைவர், 'வேலூர் கோட்டை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் ஜூன் 25ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதையொட்டி, அம்பாள் சந்நிதி முன்பு உள்ள சிறிய கொடிமரத்துக்கு ரூ.43 லட்சம் மதிப்பில் 650 கிராம் (80 சவரன்) எடைகொண்ட தங்க கவசங்கள் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.
4 கோடி மதிப்பில் தங்க முலாம்: மேலும், ரூ.2 கோடி மதிப்பில் 3 கிலோ தங்க கவசங்கள் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் முன்புள்ள பெரிய கொடிமரத்தில் இன்று (ஜூன் 20) நிர்மானம் செய்யப்பட்டது. இதைத் தவிர, கோபுரக் கலசங்கள் உட்பட அனைத்து கலசங்களுக்கும் தங்க மூலாம் பூசும் வேலைப்பாடுகளும் ரூபாய் நான்கு கோடி மதிப்பில் செய்யப்பட்டன. பின் அவை படிப்படியாக நிர்மானம் செய்யப்படட உள்ளன.
அன்னதானம்: இதைத்தொடர்ந்து, வரும் ஜூன் 25ஆம் தேதி காலை 9 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள் செய்யப்பட்டு காலை 9.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதன் பின்னர், மாலை 4 மணிக்கு மகா அபிஷேகமும், 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 8 மணிக்கு சுவாமி திருவீதி உலா வருகை ஆகிய நிகழ்வும் நடைபெற உள்ளன. இந்த கும்பாபிஷேகத்தை ஒட்டி 40,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும். இதற்காக கோட்டை வளாகத்தில் 10 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு மருத்துவ முகாம்: இந்த கும்பாபிஷேகத்தையொட்டி, கோட்டை கோயிலுக்கு ரூ.5 கோடி மதிப்பில் புதிய தங்கத்தேரை அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன், டி.வேலு, டி.கங்கப்பா ஆகியோர் தானமாக அளிக்க உள்ளனர். கும்பாபிஷேக விழாவையொட்டி, வேலூர் கோட்டை வளாகத்திற்குள் விவிஐபி, அரசு வாகனங்கள் தவிர இதர வாகனங்களுக்கு அனுமதியில்லை. பக்தர்கள் நலன்கருதி வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்களுக்கு வேலூர் நறுவீ மருத்துவமனை சார்பில் கோட்டை வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.