வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பாஸ்மார்பெண்டா கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சாலைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் பள்ளிக்கு வர 3 முதல் 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நடந்து வந்துள்ளனர். இதனால் பள்ளி மாணவர்கள் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலை இருந்து வந்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் பலர் பள்ளி வருவதையே பெற்றோர்கள் நிறுத்தியுள்ளனர். காடு மற்றும் மலைப்பகுதி என்பதனாலும் சீரற்ற சாலை அமைப்பினாலும் அப்பகுதிக்கு பேருந்து வசதி என எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை என்பது குறிப்பிடதக்கது. இதனால் பள்ளிக்குச் செல்ல மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பேரணாம்பட்டு கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்த தினகரன் என்பவர் பாஸ்மார்பெண்டா அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். மாணவர்களின் அவல நிலையை அறிந்த தினகரன், அந்த மாணவர்களின் சிக்கலைப் புரிந்துக் கொண்டு அவரது சொந்த செலவில் ஆட்டோ வாங்கி, அந்த மாணவர்களை தினமும் காலையில் பள்ளிக்கு அழைத்து வருவது மற்றும் பள்ளி முடிந்து மாலையில் வீட்டிற்கு அழைத்துச் செல்வது என அரசு பள்ளி மாணவர்களுக்கான சேவையை தொடங்கியுள்ளார்.
தினமும் பள்ளிக்கு சீரான சாலை வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகும் குழந்தைகளின் ஊருக்கே சென்று காலையில் பள்ளிக்கு அழைத்துச் செல்லவதும், பள்ளி முடிந்த பிறகு மாலையில் வீட்டில் விடுவது என இடைநிலை ஆசிரியர் ஆட்டோ அரசு பள்ளி குழந்தைகளுக்காக ஆட்டோ ஓட்டுநராக மாறியுள்ளார். தினகரனின் இந்த செயல் பள்ளி மாணவர்களிடையும் பெற்றோர்களிடையும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் தினகரனின் இந்த முயற்சி மாணவர்களிடையே கல்வி கற்கும் ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது.
இவர் தினமும் பாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு காலை 7:00 மணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்து, பள்ளியில் இருந்து ஆட்டோவை எடுத்துச் சென்று சாமஏரி, கொல்லைமேடு, உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து வரும் பள்ளி மாணவ மாணவியர்களை இலவசமாக ஆட்டோவில் அழைத்து வரும் சேவையை செய்து வருகிறார்.
இந்த சேவையினால் பள்ளி மாணவர்கள் உரிய நேரத்திலும் எந்த ஒரு அவதியும் இன்றி சந்தோஷமாக பள்ளிக்கு வருவதாக ஆசிரியர் தினகரன் தெரிவிக்கிறார். காலையில் 9:00 மணிக்கு தொடங்கும் பள்ளிக்கு முன்னதாக 7:30 மணிக்கு வந்து பள்ளி மாணவர்களை தினந்தோறும் ஆட்டோவில் அழைத்து வந்து பாடம் கற்பிக்கும் இவருடைய சேவையை மாணவர்களின் பெற்றோர்களும் கிராம மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து பள்ளி மாணவர் சுரேஷ் கூறுகையில், "எங்கள் ஊர் பாஸ்மார்பெண்டா மலை கிராமம். பள்ளியிலிருந்து வெகு தூரம் இருப்பதனால் தினமும் பள்ளிக்கு தாமதமாகமே வருவோம். பள்ளி வருவதற்கு சிரமபட்டு கொண்டிருந்த நாங்கள், ஆசிரியரின் இந்த சேவையால் என் அக்கா, தங்கை, நண்பர்கள், மற்றும் சகமாணவர்கள் என அனைவரும் எந்த ஒரு அவதியின்றி பள்ளிக்கு வரமுடிகிறது. மேலும் நிம்மதியாக கால் வழியின்றி எந்த துயரமும் இல்லாமல் எங்களால் பள்ளிக்கு வரமுடிகிறது. இதற்கெல்லாம் எங்கள் தினகரன் சார் தான் காரணம்" என தன் மழலை குரலில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
சீரான சாலை வசதி ஏதும் இல்லாததால் அந்த மலைக்கிராம மாணவர்கள் பள்ளிக்கு தினமும் 3-4 கிமீ தூரத்திற்கு நடந்தே செல்லும் அவலம் ஏற்ப்பட்ட நிலையில் மாணவர்களின் கல்வியை முன்னிறுத்தி மற்றும் அவர்களின் கல்வி ஆர்வத்தை தூண்டும் வகையில் செயல்படுத்தப்பட்ட ஆசிரியரின் இந்த முயற்சியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க:Kallanai Dam: டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு.. மலர் தூவி திறந்து வைத்த அமைச்சர் கே.என்.நேரு!