வேலூர்: காட்பாடியில் இயங்கி வரும் அரசுப்பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்புப் படித்து வரும் கூலித்தொழிலாளியின் 13 வயது மகள், நேற்று (மார்ச் 27) மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக்கண்ட பெற்றோர், உடனடியாக சிறுமியை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமி தற்கொலைக்கு முயன்ற காரணத்தை கேட்டு அதிர்ந்த பெற்றோர், இது தொடர்பாக திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பாலியல் தொல்லை: புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமி படிக்கும் அதே அரசு பள்ளியில் பணியாற்றும் 55 வயதான இயற்பியல் ஆசிரியர், தன்னிடம் தகாத முறையில் நடந்து வந்ததாகவும், வகுப்பறையில் தனியாக அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மேலும் அவரது வீட்டின் முகவரி கொடுத்து தனியாக வரும்படி வற்புறுத்தியதாகவும் தெரியவந்துள்ளது. இதனால், பயந்து போன சிறுமி, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, செய்வதறியாது, நேற்று (மார்ச் 26) தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
ஆசிரியர் கைது: இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த திருவலம் காவல் துறையினர், சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர் பிற மாணவிகளிடத்தில், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
தன்னிடம் கல்வி கற்கும் பள்ளி சிறுமியிடம் ஆசிரியரே இதுபோன்று தவறான செயலில் ஈடுபட்டது சக பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியிலும் பெரும் கோபத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் கடந்த 17ஆம் தேதி இரவு ஆண் நண்பருடன் பயணித்த பெண் மருத்துவரை கடத்தி, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வடு ஆறும் முன்பே, மேலும் இது போன்றதோறு சம்பவம் நிகழ்ந்திருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உறவில் இருந்த காதலி முகத்தில் திராவகம் வீசிய இளைஞர் - போலீசார் வலை வீச்சு