மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வேலூர் தலைமை அஞ்சல் நிலையம் அருகே இன்று விசிகவினர் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான முனைவர். தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.
போராட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், " வேளாண் சட்டங்கள் முழுவதும் பெருநிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளன. இதை எதிர்த்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் தற்போது உச்சத்தை எட்டியிருக்கக்கூடிய நிலையில், மத்திய அரசு தனது பிடிவாதத்தில் இருந்து இன்னும் பின்வாங்கவில்லை. வருகின்ற 16ஆம் தேதி ஜெய்பூர்- புதுடெல்லி சாலைகளை மறித்து டெல்லிக்கு வருவதைத் தடுப்போம் என போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். பாஜக அலுவலகங்கள் முற்றுகையிடப்படும் என்று கூறியதை ஆதரிக்கும் வகையில் விசிக தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகிறது.
வானவில் மையம் நடத்தும் கலைப் பண்பாட்டு திருவிழாவிற்கு கட்சியே தொடங்காத ரஜினிக்கு பாஜக அழைப்பு விடுத்திருப்பது, பாஜகவுக்கும், ரஜினிக்கும் உள்ள நெருக்கத்தை காட்டுகிறது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் இடையே நடக்கக்கூடிய விமர்சனங்கள் அரசியல் அடிப்படையிலான விமர்சனங்களாக மட்டுமே இருக்கவேண்டும்.
தமிழ்நாட்டை சாதி வெறியர்களும், மத வெறியர்களும் ஆக்கிரமித்துள்ளனர். பொதுப்பிரச்னைக்காக போராடக்கூடிய உணர்வு மங்கியுள்ளது. மொழிக்காக, இனத்திற்காக போராடிக்கொண்டிருந்த தமிழ்நாடு, சாதிக்காகவும் மதத்திற்காவும்தான் வீதிக்கு வரும் என்கிற நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். சாதி, மத வெறியர்கள் அதிகார வலிமை பெற்றால் தமிழ்நாடு பாழ்பட்டுப்போகும்" என்றார்.
இதையும் படிங்க: