ஆம்பூர் அருகே மாதனூர் ஊராட்சி ஒன்றியம் செங்கிலி குப்பம் ஊராட்சி பகுதியில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக கிராம மக்கள் ஒன்றிணைந்து காத்திருந்தபோது, சுமார் இரண்டு மணி ஆகியும் அலுவலர்கள் யாரும் வராததால் ஊராட்சி செயலாளரிடம் கூட்டத்தைத் தொடங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, ஊராட்சி செயலாளர் கூட்டத்தைத் தொடங்கியவுடன் செங்கிலி குப்பம் ஊராட்சியில் பொருத்தப்பட்டுள்ள சுமார் ஏழு மின் மோட்டார்கள் பழுதாகியுள்ளது. ஒரு வாரத்திற்கு ஒரு முறை கூட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் கிடைக்கவில்லை என்று கிராம மக்கள் அடுக்கடுக்கான கேள்விகளை அலுவலர்கள் முன் வைத்தனர். இதற்கு ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியம், பணம் ஏதும் இல்லாததால் சரி செய்ய முடியவில்லை என்று சொன்னதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது சிவா என்பவரை ஊராட்சி செயலாளர் சுப்பிரமணி என்பவர் சரமாரியாகத் தாக்கி அவர் சட்டையைக் கிழித்து எறிந்தார். பின்னர் ஊராட்சி செயலாளரை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மதியழகன் தலைமையில் மீண்டும் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, ‘100 நாள் வேலைத் திட்டத்தில் கிராம மக்கள் 500 நாட்கள் வேலை செய்து வருகின்றனர். அதில் 50 நாட்கள் மட்டுமே அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. வெட்டப்பட்டுள்ள கால்வாய்களை இன்னும் கட்டி முடிக்கப்படாத நிலையில் உள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்திற்கு வராதவர்களுக்குக் கூட பணம் கொடுக்கப்படுகிறது. மாதத்திற்கு ஒருமுறை கூட கழிவுநீர் கால்வாயைச் சுத்தம் செய்வதில்லை’ உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
மேலும், அதற்கான பணத்தை மட்டும் ஊராட்சி செயலாளர் எடுத்துக்கொள்வதாகவும் மண்டல வட்டாட்சியரிடம் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இதையெல்லாம் கேட்டுக்கொண்ட அலுவலர்கள், கிராம மக்களின் புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.