வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி வேளாளர் தெருவைச் சேர்ந்தவர் கென்னடி. இவர் வெளிநாட்டில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் கோகுல்(19) லத்தேரி அருகிலுள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்தும் கோகுல் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு மர்ம நபர்கள் கோகுல் வீட்டிற்குத் தொடர்பு கொண்டு, 'உங்கள் மகன் எங்களிடம் உள்ளான். மூன்று கோடி கொடுத்தால்தான் உங்கள் மகனை விடுவிப்போம்' என்று கூறி செல்போனில் மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து, உடனடியாக அவனது குடும்பத்தினர் சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன், அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் மூன்று தனிப்படைகளை அமைத்து மாணவனை மீட்க திட்டமிட்டனர். ஒரு கட்டத்தில் சூதுகவ்வும் பட பாணியில் 3 கோடியிலிருந்து படிப்படியாக குறைத்து வந்து ரூ.5 லட்சத்தையாவது தருமாறு கடத்தல் கும்பல் தெரிவித்தது.
இதனையடுத்து கட்டுக்கட்டாக வெள்ளை பேப்பர்களைக் கட்டி பணம் இருப்பதைப் போல் பையை உருவாக்கி, அந்த கும்பலிடம் அக்குடும்பத்தினர் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து மாணவனை விடுவித்த அக்கும்பலைச் சேர்ந்த 4 பேரை, மறைந்து இருந்த காவல்துறையினர் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கோகுல் படிக்கும் அதே கல்லூரியில் படிக்கும் சுதர்சனும், அவனின் மூன்று நண்பர்களும் சேர்ந்து கோகுலைக் காரில் கடத்தியது தெரியவந்தது. கோகுல் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதை அறித்த சுதர்சன், அவனை கடத்தி பணம் கேட்டு உல்லாச வாழ்க்கை வாழலாம் என திட்டம் தீட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.