வேலூர்: வேலூர் அண்ணா சாலையில் உள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை அங்காடியில், வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பட்டாசு விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் நேற்று (நவ.7) துவக்கி வைத்தார்.
வருகிற நவம்பர் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் சீன பட்டாசுகள் விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில் “கூட்டுறவு மொத்த விற்பனை அங்காடியில் கடந்த ஆண்டு ரூ.85 லட்சத்திற்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஒரு கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கூட்டுறவு கடைகளில் விற்பனை செய்யப்படும் பட்டாசுகள் தரமானதாகவும், குறைந்த விலையிலும் இருப்பதால் பொதுமக்கள் அதனை வாங்கி பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். வேலூர் மாவட்டத்தில் சீன பட்டாசுகள் விற்பனை செய்யப்பட மாட்டாது.
மீறி விற்பனை செய்யும் நபர்கள் மீது புகார்கள் வந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற உத்தரவின்படி பட்டாசு வெடிக்கும் நேரத்தை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்” என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாநகர மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி.. தென்காசி பள்ளி மாணவர்களுக்குத் தீயணைப்புத் துறை விழிப்புணர்வு!