வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சியினர் பரப்புரை செய்துவருகின்றனர். இந்நிலையில் இன்று வேலூர் மாவட்ட பகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து ஸ்டாலின் ஆம்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இஸ்லாமிய அமைப்பினருடன் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் சுஜாதா தலைமையிலான அலுவலர்கள் அங்கு சென்றனர். தேர்தல் விதிமுறை அமலில் இருக்கும் நிலையில், உரிய அனுமதியின்றி கூட்டம் நடைபெற்றதாகக் கூறி அந்த மண்டபத்திற்கு சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.