வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பெல் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், இன்று (நவ. 28) வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் தனியார் மண்டபத்தில், அப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.
31 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றது. இதில் முன்னாள் ஆசிரியர்கள் மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்துகொண்டனர். இப்பள்ளியில் பயின்றவர்களில், ஒரு மாவட்ட ஆட்சியர் 450-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பொறியாளர்கள் அரசு, தனியார் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தற்போது பணியாற்றி வருகின்றனர்.
இந்த சந்திப்பில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தங்களது பழைய நினைவுகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டனர். மேலும் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களிடம் ஆசி பெற்று செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி.வி.சங்கர் விஸ்வநாதன் கலந்து கொண்டார்.
சிறந்த முறையில் பணியாற்றி வரும் முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஜி.வி.சங்கர் விஸ்வநாதன் கேடயங்களை வழங்கி கௌரவித்தார். விழாவில் பேசிய அவர், “இதுபோன்று ஒருமுறை மட்டும் நடத்தாமல் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் ஆசிரியர்கள் மாணவர்கள் சந்திப்புகளை நடத்தி, ஒருவருக்கொருவர் தங்களின் நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்” என கூறினார்.
இதையடுத்து, அப்பள்ளியில் பயின்ற மாணவர்களின் பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியர்கள் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து ஆர்கானிக் உணவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு உண்டனர். காலங்கள் கடந்து ஓடும் இத்தகைய சூழ்நிலையில் இது போன்ற மலரும் நினைவுகளை நினைவு கூறுவது நெகிழ்ச்சியான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதிதாக திறக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பாதை: மகிழ்ச்சியும் கோரிக்கையும்