வேலூர்: பாரம்பரியத்துக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் 'கோலி சோடா' நூற்றாண்டை கொண்டாடுகிறது. தமிழ்நாட்டில் முதன்முதலில் வேலூரில் தான் கோலி சோடா தயாரானது. வேலூரில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க அந்த காலத்திலேயே பலவிதமான குளிர்பானங்களை பருகத் தொடங்கினர். 1980-களில் குளிர்பானம் என்றதும் நினைவுக்கு வருவது கோலி சோடாதான். வீட்டுக்கு விருந்தினர் வந்ததும் நாம் தேடி செல்வதும் கோலி சோடாதான். இதன் பிறகு வெளிநாட்டு குளிர்பானங்கள் பிரபலமாகிய போதும், இவற்றின் மவுசு குறையவில்லை.
வேலூரை சேர்ந்த கண்ணுசாமி முதலியார் என்பவர் கோலி சோடா தயாரித்து சிறிய கடையில் முதன்முதலில் விற்பனை செய்ய விரும்பினார். இதற்காக ஜெர்மனியில் இருந்து கோலி சோடா பாட்டில்களை இறக்குமதி செய்தார். 1924ஆம் ஆண்டு முதன்முதலாக கோலி சோடாவை அவர் தயாரித்தார். வேலூர் மாவட்டத்தில் சிறிய பெட்டி கடைகளுக்கு கோலி சோடா சப்ளை செய்யப்பட்டது.
அந்த காலத்தில் சென்னை - பெங்களூர் சாலையில் பயணம் செய்தவர்கள் வழியில் உள்ள கிராமங்களில் கோலி சோடா குடித்திருப்பதை மறந்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு கோலி சோடா வேலூரில் பிரபலமாக இருந்தது. முதன் முதலாக தயார் செய்யப்பட்ட கோலி சோடா பாட்டில்களை இன்றும் வேலூரில் உள்ள கண்ணன் சோடா கம்பனியில் அவரது தலைமுறையினர் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
அதில் மேட் இன் ஜெர்மனி என எழுதப்பட்டுள்ளது. தற்போது பழம், புளூபெர்ரி, கோலா, எலுமிச்சை, ஆரஞ்சு, பச்சை என பலவிதமான கோலி சோடாக்களை தயார் செய்து வருகின்றனர். இங்கிருந்து வட மாவட்டங்கள் முழுவதும் இவர்கள் கோலி சோடா விற்பனையை விரிவுபடுத்தியுள்ளனர். கண்ணுசாமி முதலியாரால் தொடங்கப்பட்ட இந்த கோலி சோடா 100-வது ஆண்டை எட்டியுள்ளது.
கண்ணன் சோடா கம்பெனி உரிமையாளர் வி.டி.மோகன கிருஷ்ணன் நமது ஈடிவி பாரத்திடம் கூறுகையில், 'நாங்கள் கண்ணன் சோடா கம்பெனியை நான்கு தலைமுறைகளாக நடத்தி வந்த நிலையில், 100ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். முதல்முதலாக 1924 ஆம் ஆண்டு கண்ணுசாமி முதலியார், கோலி சோடா பானங்கள் உற்பத்தி செய்து நடத்தி வந்தார். இதற்கு முன்பு 1890-ல் அவரது முன்னோர்களால் சில சூழ்நிலைகளால் இதனை சரிவர நடத்த முடியாமல் போனது. அதன் பின்பு, நாங்கள் 1924 இருந்து இயக்கி வருகிறோம். இதைத்தொடர்ந்து, 1980 வரை மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்தது.
பின்னர் அறிமுகமான அயல்நாட்டு குளிர்பானங்களால் இதன் விற்பனை மிகவும் சரிவை கண்டது. இருப்பினும் துவண்டு விடாமல், சிறு கடைகளுக்கு வியாபாரம் செய்துவந்தோம். சமீபத்தில் 2017-ல் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, மக்கள் புரட்சியின் காரணமாக பாரம்பரியத்துக்கு மாறத் தொடங்கினர். இதையடுத்து, கலர் பானங்கள் மட்டுமல்லாமல் பிஸ்கட், குச்சி ஐஸ், கமர்கட், கடலை மிட்டாய் ஆகியவற்றுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதோடு, எங்களுடைய சோடா கலருக்கும் மக்கள் மத்தியில் பெரிய ஆதரவும் நல்ல வரவேற்பும் மீண்டும் கிடைத்தது.
அதே நேரத்தில் குளிர்பானம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கானது; மருத்துவ குணம் இல்லாதது. இந்த பானத்தில் மருத்துவ குணம் உள்ளதால் சோடா கலருக்கு பெரிய ஆதரவு மக்கள் மத்தியில் உள்ளது. இதைத்தொடர்ந்து மக்கள் எங்களுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் இப்பொழுது இருக்கக்கூடிய புதிய தலைமுறை மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் இவர்களும் மருத்துவ குணங்களை அறிந்து சுவை அறிந்து பாரம்பரியத்திற்கு மாறி வருகிறார்கள் இவர்கள் எல்லா மக்கள் உடைய ஆதரவும் மாணவ மாணவி ஆதரவுகளோடு நூறாம் ஆண்டு அடியெடுத்து வைக்கிறோம்' என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதைத்தொடர்ந்து, இத்தொழிலுக்கு மக்கள் ஆதரவு கொடுத்து கொண்டிருக்கின்றனர். இப்போதுள்ள புதிய தலைமுறை கல்லூரி மாணவர்கள் மருத்துவ குணங்களையும், சுவையையும் அறிந்து பாரம்பரியத்திற்கு மாறி வருகின்றனர். இளம் தலைமுறையினராகிய மாணவ மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவோடு 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்' என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என உணர்ச்சி பொங்க கூறினார்.
இதையும் படிங்க: 2026 சட்டப்பேரவைத்தேர்தல்.. பனையூரில் குவிந்த நிர்வாகிகள்... விஜயின் அடுத்த மூவ் என்ன?