வேலூர்: ஒடுகத்தூரை அடுத்த ஏரியூர் குறவன் கொட்டாய் அருகே உள்ள அரசம்பட்டு காப்புக்காட்டு பகுதியில், நேற்று (பிப்.20) மாலை வனச்சரக அலுவலர் இந்து தலைமையில் வனவர்கள் பிரசன்ன குமார், சுதா, வனக்காப்பாளர்கள் மணிவாசுகி, பார்த்திபன், ஜெகநாதன் மற்றும் வனக் காவலர் ஜெயபால் ஆகியோர் கொண்ட குழுவினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காட்டுப்பகுதியில் மரங்களை வெட்டும் சத்தம் கேட்டுள்ளது. எனவே உடனடியாக அந்தப் பகுதிக்கு வனத்துறையினர் சென்றுள்ளனர். அங்கு 3 பேர் சந்தன மரங்களை வெட்டிக் கொண்டு இருந்தததை வனத்துறையினர் பார்த்துள்ளனர். இதனிடையே வனத்துறை அதிகாரிகளை பார்த்த கடத்தல்காரர்கள் 3 பேரும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர்.
அப்போது அவர்களை விரட்டிச் சென்ற வனத்துறை அதிகாரிகளிடம் ஒருவர் மட்டுமே பிடிபட்டுள்ளார். இதனையடுத்து பிடிபட்ட இளைஞரை கைது செய்த வனத்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் பிடிபட்ட நபர், குனுங்கனூரைச் சேர்ந்த சங்கர் (35) என்பது தெரிய வந்துள்ளது.
அது மட்டுமல்லாமல், அவர் உள்பட 3 பேரும் சந்தன மரங்களை வெட்டி தொங்கு மலைக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து வேறு இடத்திற்குக் கடத்திச் செல்ல திட்டம் தீட்டியதும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 8 சந்தன மரக்கட்டைகள் மற்றும் மரம் வெட்டுவதற்கு பயன்படுத்திய வாள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதன் தற்போதைய மதிப்பு 1 லட்சம் ரூபாய் இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தப்பி ஓடிய வெள்ளையன் தொங்கும் மலை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (40) மற்றும் பெரிய ஏரியூர் சேகர் (32) ஆகிய இருவரையும் வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் தோழிக்காக பக்கத்து வீட்டில் திருட்டு.. வேலூர் இளைஞர் கைது!