வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை பகுதியில் கிராம உதவியாளராக பணியாற்றுபவர் துரைராஜ். இவர் வேலூர் மாவட்ட கிராம உதவியாளர் சங்கத்திற்கு தலைவராகவும் உள்ளார்.
இந்நிலையில் இவர் நேற்று (ஜூலை 27) தட்டப்பாறை நாட்டார்பட்டி ஆற்றில் கோணிப்பை மூலம் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த அண்ணன், தம்பியான சுப்புராமன் மற்றும் குமார் ஆகியோரை எச்சரித்து தட்டிக்கேட்டுள்ளார். அப்போது இவர்கள் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. பிறகு தகராறு பெரிதாக அண்ணனும் தம்பியும் தட்டப்பாறை கிராம உதவியாளர் துரைராஜை கட்டையால் தாக்கி, கை விரலைக் கடித்து அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதனையடுத்து பலத்த காயமடைந்த கிராம உதவியாளர் துரைராஜ் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை அறிந்த குடியாத்தம் கிராமிய காவல் துறையினர், மணல் கடத்தலில் ஈடுபட்டு, அரசு ஊழியரை தாக்கி தலைமறைவான சகோதரர்கள் சுப்புராமன், குமார் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.