தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாவது அலை பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலக்கட்டத்தில் திருமணங்கள், திருவிழாக்கள் போன்ற எல்லா நிகழ்வுகளுக்கும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்கு தேவைப்படும் ரோஜாப்பூ உள்ளிட்ட பூக்களின் விற்பனை முற்றிலுமாக சரிந்துள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டம், பரதராமியை அடுத்த பூசாரிவலசை கிராமத்தைச் சேர்ந்த, ரோஜாப்பூ விவசாயம் செய்து வரும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விலை ரூபாய் 100 முதல் 150 வரை விற்பனையான ரோஜாப்பூக்கள், இந்த ஊரடங்கு காரணமாக வெறும் பத்து ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாவதாக வேதனைத் தெரிவித்துள்ளனர்.
”நகரங்களில் உள்ள சந்தைகளுக்கு இவற்றை விற்பனைக்காக எடுத்துச் செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினாலும் பூக்களின் விலை மிகவும் குறைந்துள்ளது. பூப்பறிக்க வரும் கூலி ஆள்களுக்குக்கூட கூலி கொடுக்க முடியாத சூழலில், ரோஜா, செண்டு மல்லிகை உள்ளிட்ட பூக்கள் விற்பனையின்றி அறுவடை செய்யப்படாமல் அப்படியே உள்ளன. மேலும் அறுவடை செய்யப்படாத பூக்களை கால்நடைகளை விட்டு மேயவிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்” என விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்
தமிழ்நாடு அரசு எங்களைப் போன்ற விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மானியம் தந்து எங்களுடைய வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: ஊரடங்கை மதிக்காத மக்கள் - அடுத்தடுத்து வாகனங்கள் பறிமுதல்!