வேலூர்: ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு புது தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் தனியார் தொழிற்சாலையில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ராணி தற்காலிக கிராம தூய்மை காவலராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவர் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராணி நேற்று (நவ.24) தனது உறவினர் இல்லத்திற்கு சென்றுள்ளார். மேலும் கந்தசாமி வழக்கம் போல் இரவு காவலாளி பணிக்கு சென்றுள்ளார். இந்த சூழலை பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள், வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 8 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி விட்டு, பின்பு வீட்டிற்கு தீ வைத்து சென்றுள்ளனர்.
வீடு தீப்பற்றி எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டின் உரிமையாளரான கந்தசாமி மற்றும் சிப்காட் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இதையும் படிங்க: 'நான் தான் டெங்கு; உனக்கு ஊதுவேன் சங்கு' கொசு வேடத்தில் விழிப்புணர்வு!