வேலூர்: 10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்துவந்த போலி மருத்துவரின் கிளினிக் சீல் வைக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் கிடங்கு தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்(40). பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே படித்து முடித்த இவர், கடந்த 10 ஆண்டுகளாக அதே பகுதியில் அவரது பெயரில் மருத்துவ கிளினிக் ஒன்றை நடத்தி வந்தார்.
இந்நிலையில், இவர் போலி மருத்துவர் என்று பொதுமக்கள் சார்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில், வேலூர் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தின் சார்பில் டாக்டர் சந்தோஷ்குமார் மற்றும் அணைக்கட்டு சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சீனிவாசன் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் கடந்த 2019 அன்று டிப்ளமோ எலக்ட்ரோபதி (Electropathy) முடித்ததாக சான்றிதழ் வைத்துக்கொண்டு அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இது சட்டப்படி குற்றம் என்று அங்கு இருந்த அலோபதி மருந்துகள், உபகரணங்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும், இது குறித்து அணைக்கட்டு தாசில்தார் சரவணனிற்கு தகவல் அளிக்கப்பட்டு, வேப்பங்குப்பம் போலீசார் முன்னிலையில் கிளினிக்கிற்கு சீல் வைக்கப்பட்டது. கிளினிக் நடத்தி வந்த ரமேஷ் தப்பி ஓடியுள்ளார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.