வேலூர்: மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய ஒத்துழைப்பு இல்லாததால் 6 ஒன்றிய கவுன்சிலர்கள், பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் வழங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஒத்துழைப்பு வழங்காத தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து, திமுக துணை தலைவர் முனியம்மா உட்பட 6 ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதத்தை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கியுள்ளனர்.
காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 10 வார்டுகள் உள்ளன. இதில் 6 திமுக கவுன்சிலர்களும், அதிமுக, பாமக, சுயேட்சை, காங்கிரஸ் ஆகியவற்றிற்கு தலா 1 கவுன்சிலர்களும் உள்ளனர். இந்நிலையில், ஊராட்சி ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட அனிதா குப்புசாமி, ஊராட்ச்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர ஒன்றிய கவுன்சிலர்களுக்கு முறையாக ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றிய கவுன்சிலர்களாக இருந்தும், தங்களது வார்டுகளுக்கு எந்த விதமான பணியும் செய்யமுடியாததால், திமுக துணை தலைவர் முனியம்மா உட்பட 6 ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி ஊரகத்துறை அலுவலர் சைபுதீன் என்பவரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளனர். இச்சம்பவம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.