வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த இருதினங்களாக பெய்து வரும் மழையால் ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழையால் வாணியம்பாடி அடுத்த மாராபட்டு பகுதியில் உள்ள பாலாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், வாணியம்பாடி பகுதியில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல் நேரடியாக ஆற்றில் திறந்துவிடுகின்றனர்.
இதனால், பாலாற்றில் நுரை பொங்கி ஆற்றுப்பகுதி முழுவதும் வெண்மை நிறத்தில் காட்சியளிக்கிறது. இப்பகுதியில் ஏற்கனவே நிலத்தடி நீர் முழுவதும் மாசடைந்துள்ள நிலையில், இந்த கழிவுநீர் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்படும். எனவே, உடனடியாக இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.