வேலூர்: ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ.29) மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தின்போது, திமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுப்பதாக விவசாயி ஒருவர் கண்ணீர் மல்க ஆட்சியரின் முன்பாக விழுந்து மன்றாடிய அவலம் நடந்துள்ளது.
மணல் கொள்ளை: பேர்ணாம்பட்டை அடுத்த பத்தலப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணண் என்பவர், 'தங்கள் பகுதியிலுள்ள மலட்டாறு, மலைப்பகுதிகளில் திமுக பிரமுகர் ராஜமார்த்தாண்டம் என்பவர் 'மணல் கொள்ளை'யில் ஈடுபட்டு வருவதனால் 'விவசாயம் பாதிக்கிறது' என அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளேன். இதனால், என்னை கார் ஏற்றி கொலை செய்து விடுவேன் என 'கொலை மிரட்டல்' விடுக்கிறார்.
விவசாயிக்கு கொலை மிரட்டல்?: இதுகுறித்து ஏற்கனவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்தப் புகாரின் மீதும் இதுவரை நடவடிக்கை இல்லை. நான் தனியாக வீட்டில் வசித்து வருகிறேன். எனது உயிருக்கு அச்சுருத்தல் உள்ளது. எனவே, என்னை காப்பாற்றுங்கள் எனக்கூறிய படி, ஆட்சியர் முன்பாக மன்றாடி கோரிக்கை வைத்தார். இதுகுறித்து ஏற்கனவே மனு அளித்துள்ளீர்கள். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பதிலளித்தார்.
சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், இவ்வாறு மணல் கொள்ளையை தடுக்கக் கோரி மனு அளித்ததால் தனது உயிருக்கு திமுக பிரமுகர் ஒருவரால் ஆபததுள்ளதாக விவசாயி மன்றாடிய சம்பவம், அனைவரையும் பரபரப்புக்கு உள்ளாக்கியது.
அரசு நடவடிக்கை கவனம் தேவை: அதே நேரம் சம்பந்தபட்ட அப்பகுதியைச் சேர்ந்த விஏஓ, வருவாய் ஆய்வாளர், கனிமவளத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து மணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அதே சமயம் விவசாயியின் மனு மீது மாவட்ட ஆட்சியர் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மணல் உள்ளிட்ட கனிமவளங்கள் கொள்ளையை தடுத்து அப்பகுதியில் இயற்கை வளங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சாலை வசதி கோரிக்கை: இரண்டாவதாக, குடியாத்தம் அடுத்த உள்ளி பகுதியில் மீண்டும் அலுமினிய தொழிற்சாலையை திறந்ததால், தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு பல்வேறு சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதாகப் புகார் தெரிவித்தனர். அதேபோல, அணைகட்டு அடுத்த அப்புக்கல் - மானியக்கொல்லை இடையே 13 ஆண்டுகளாக போதிய சாலை வசதிகள் இல்லாமல், 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் சாலை அமைக்கக் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆக்கிரமிப்பில் ஓடை-ஆதார் கார்டு ஒப்படைப்பு: மேலும், ஓடை கால்வாயை தனிநபருக்கு பட்டா போட்டுக் கொடுத்ததாகக் கூறப்படும் நிலையில், அதனை ஆய்வு செய்து சாலை அமைத்து தர வேண்டும் எனக் கூறி, முன்னாள் ராணுவ வீரர் குமாரசாமி என்பவர் நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை மனு அளித்துள்ளார். இந்நிலையில் அந்த மனுவின் மீது எந்த விதமான நடவடிக்கையும் இதுவரையில் எடுக்காமல் உள்ளதைக் கண்டிக்கும் விதமாக இன்று நடந்த இந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் தனது வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை ஒப்படைத்து விட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'நளினி பற்றி பேசினால் கொன்றுவிடுவோம்' சீமான் தரப்பை சந்தேகப்படும் டெய்ஸி!