புதிய வீடுகள் கட்டித் தரவேண்டும், 17 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட திருநங்கைகளுக்கான இலவச அடுக்குமாடி குடியிருப்பை சீரமைக்கக் கோரியும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்திடம் திருநங்கைகள் இன்று(நவ. 02) மனு அளித்தனர்.
இது குறித்து திருநங்கைகள் அமைப்பின் மாநில செயலாளர் கங்கா நாயக்,"வேலூர் மாவட்டம் ஆரியமுத்து மோட்டூர் பகுதியில் 17 வருடங்களுக்கு முன்பு திருநங்கைகளுக்காக இலவச அடுக்கு மாடி வீடு மாவட்ட சமூக நலத்துறை சார்பாக கட்டி கொடுக்கப்பட்டது. அச்சமயம் வேலூரில் இருந்த 40 திருநங்கைகளில் 20 நபர்களுக்கு இலவச வீடு கட்டி கொடுக்கப்பட்டது. தற்போது அந்த வீடுகளும் சிதலமடைந்து மோசமான நிலையில் உள்ளன.
அந்தக் குடியிருப்பில் உள்ள இரண்டு வீடுகளின் ஒரு பகுதி சுவர் பெருமளவில் சேதமடைந்து இடிந்து விழும் நிலைக்கு வந்துவிட்டது. வீடுகளின் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்வதால் அங்கு வசிக்கும் திருநங்கைகள் பாதுகாப்பாய் வசிப்பதற்கு அருகில் இருந்த காலி இடத்தில் ஒரு அறையை கட்டி தங்கியுள்ளோம்.
நாங்கள் வசிக்கும் குடியிருப்பின் அருகே 50 மாற்றுத்திரனாளிகளுக்கு கழிவறை வசதியுடன் கூடிய தனி வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு மட்டும் பொது கழிவறை வசதிதான்.
சமீபத்திய கணக்கெடுப்பின்படி வேலூரில் 500க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே 20 திருநங்கைகளுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட அரசின் இலவச வீட்டிற்கு அருகிலேயே தனி கழிவறை வசதியுடன் கூடிய வீடு கட்டித் தர வேண்டும் என்று பல முறை மாவட்ட சமூக நலத்துறையிடம் கோரிக்கை மனு அளித்தோம் ஆனால் எவ்வித பயனும் இல்லை”என்றார்.
புதிய வீடுகளுடன், ஏற்கனவே கட்டிக் கொடுத்த வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என்பதே திருநங்கைகளின் ஒருமித்தக் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:சபரீசன், நக்கீரனுக்கு எதிரான மான நஷ்ட வழக்கை ரத்து செய்ய மறுப்பு!