71ஆவது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி விளையாட்டு மைதானத்தில் கொடி பறக்கவிடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நிகழ்ச்சியில் பங்கேற்று தேசியக்கொடி பறக்கவைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் சரக காவல் துறைத் தலைவர் (டிஐஜி) காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உள்ளிட்ட பல அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து சமாதானத்தை வெளிப்படுத்தும்வகையில் வெள்ளை புறாக்களை மாவட்ட ஆட்சியர் பறக்கவிட்டார். அதையடுத்து, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
பின்னர், காவல் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்த காவலர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார்.
பின்னர், பல்வேறு துறைகளின் கீழ் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மொத்தம் இரண்டு கோடியே 90 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, வேளாண் இயந்திரம், விவசாய உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இறுதியாக பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையும் படிங்க: 71ஆவது குடியரசு தினம் - மாவட்ட ஆட்சியர்கள் கொடியேற்றம்