முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையிலிருக்கும் முருகனின் அறையிலிருந்து, கடந்த மாதம் செல்ஃபோன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் இன்று ஆஜராவதற்காக முருகன், பலத்த காவல் பாதுகாப்புடன் மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர், நீதிபதி ஷா முன்னிலையில் முருகன் ஆஜரானபோது, வழக்கு விசாரணையை டிசம்பர் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து முருகன் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முன்னதாக, சிறையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், எனவே புழல் சிறைக்கு மாற்றக்கோரியும் முருகன் சிறையில் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு வந்த முருகனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, அவர் எந்த பதிலும் அளிக்காமல் சென்றுவிட்டார். ஏற்கெனவே இதே வழக்கில் கடந்த மாதம் 31ஆம் தேதி நீதிமன்றத்தில் முருகன் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராஜிவ் கொலை வழக்கு: உண்ணாவிரதத்தை கைவிட்ட முருகன்!