வேலூர்: பிரதமர் குறித்த அவதூறு வழக்கில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன் காரணமாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாகக் குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (ஜூலை 7) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
இதனால், வேலூர் மாநகர் மாவட்டத் தலைவர் டீக்காராமன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தலைமையில் பாஜகவை எதிர்த்து அண்ணா சாலையில் கண்டன முழக்கங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 50 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்பு அவர்களை வேனில் ஏற்றி சுங்கச்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு பொதுச் செயலாளர் சித்திரஞ்சன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் வாஹித் பாடஷா, மண்டல தலைவர்கள் ரகு, மனோகரன், அசோக் குமார் மாநில பிசிசி கஸ்பா கணேசன் மாவட்ட எஸ்.எஸ்.டி பிரிவு தலைவர் தங்கமணி. மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன். மாவட்ட சேவா தள தலைவர் ஹரி கிருஷ்ணன் ஆனந்த், மகளிர் அணி காஞ்சனா மற்றும் காங்கிரஸ் பொறுப்பாளர்கள்,நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம்: அதேபோல் வேலூர் மத்திய மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே 50 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிங்க:Rahul Gandhi: ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு மீதான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!