வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வேலூர் மக்களவை வேட்பாளரும் புதிய நீதிக்கட்சியின் தலைவருமான ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஏப்ரல் 5 ஆம் தேதி பணம் பிடிபட்ட நிலையில் ஏப்ரல் 6 ஆம் தேதி அல்லது ஓரிரு நாட்களில் தேர்தலை ரத்து செய்ய வேண்டிய தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தி ஏப்ரல் 16ஆம் தேதி கடைசி நேரத்தில் தேர்தலை ரத்து செய்வது ஏற்கதக்கதல்ல. 5 கட்டமாக தேர்தல் நடத்தும்போது வேலுார் தொகுதிக்கும் தேர்தலைய சேர்த்து நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைக்கிறோம்.
மேலும், யாரோ ஒரு நபர் தவறு செய்ததற்காக ஒட்டுமொத்த வேட்பாளர்களும் பாதிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் எடுத்திருக்கும் நடவடிக்கை பாரபட்சமானது. கடைசி நேரத்தில் தேர்தல் ரத்து செய்யப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. தேனியில் 1.25 கோடி பிடித்திருக்கிறார்கள். அங்கு ஏன் தடை செய்யவில்லை.
நான் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய வேட்பாளர். இந்தத் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். இதனால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். அவர்கள் பணம் பிடிப்பதற்காக தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.