வேலூர் மாவட்டம், விருதம்பட்டு அருகே தண்டலம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் முருகன், உமா. இவர்களது மகன் நரேந்தர்(20). டிப்ளமோ முடித்து விட்டு ராணுவத்தில் பணியில் சேர தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
இவர் குடும்ப சூழல் கருதி, மணல் அள்ள மாட்டுவண்டிக்காரர்களுடன் செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு அவரது வீடு அருகே பாலாற்றில் மணல் அள்ள சென்றபோது மாட்டு வண்டியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக நரேந்தர் உயிரிழந்தார்.
இந்நிலையில், நரேந்திரன் மரணத்திற்குக் காரணமாக இருந்த மணல் கொள்ளையைக் கண்டித்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேலூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்தை பொதுமக்கள் சிறைப் பிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் புகழ் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
'நாள்தோறும் நூற்றுக்கணக்கான மாட்டுவண்டிகளில் மணல் அள்ளுகிறார்கள், ஏராளமான இளைஞர்களுக்கு ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று அவர்களது வாழ்க்கையை சீரழிக்கிறார்கள். தற்போது, என் மகனை இழந்துவிட்டேன்’ என தாய் உமா தெரிவித்தார். பின்னர் அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைத்து மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கிறேன் என்றும், இனிமேல் அந்த பகுதியில் மாட்டுவண்டி ஓடாது என்றும் ஆய்வாளர் உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.