வேலூர் மாவட்டம் ஏரி குத்தி ஊராட்சிக்கு உட்பட்ட மெகபூர் நகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் கட்டப்பட்ட குடிநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் சரிவரப் பராமரிக்கப்படாததால் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதனால் தினமும் சாலையில் நடந்து செல்லும் குழந்தைகள் விபத்தில் சிக்குவது வாடிக்கையாக நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
பல புகார்களை அடுத்து ஒரே ஒரு சின்டக்ஸ் டேங்க் அமைத்து அதன் மூலம் தண்ணீர் விநியோகம் செய்து வந்துள்ளனர். ஆனால் தற்போது அந்த டேங்க் கூட பழுதாகி விட்டதால் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அப்பகுதியில் தண்ணீரின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் கடும் குடிநீர் பஞ்சம் காரணமாக தாங்கள் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும், நாடாளுமன்றத் தேர்தலையும்புறக்கணிக்கப் போவதாக ஊர் பகுதி மக்கள் கூட்டாகச் சேர்ந்து அறிவித்தனர்.
இதையடுத்து இன்று ஊர் பொதுமக்கள் பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று தேர்தல் அலுவலரான கோபிநாத்திடம் புகார் மனுவைக் கொடுத்தனர். அப்புகார் மனுவில், ’எங்கள் பகுதிக்குக் குடிநீர் தற்போது ஒரு குடம் ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெரும்பாலானோர் குழந்தைகளை வைத்து மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். அதனால் நாங்கள் நியாயவிலைக்கடை கார்டு, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டையை உங்களிடம் ஒப்படைப்பதற்காக வந்துள்ளோம். நாங்கள் அனைவரும் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்