வேலூர்: மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள "அக்னி பாத்" திட்டத்தை ரத்து செய்யக்கோரி வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தேசியக்கொடியுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய ராணுவத்திற்காக ஆட்களைச் சேர்க்க திருவண்ணாமலையில் நடைபெற்ற உடற் தகுதித்தேர்வில் இவர்கள் தேர்வானார்கள். ஆனால், கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் கரோனாவைக் காரணம் காட்டி எழுத்துத்தேர்வு நடத்தப்படவில்லை.
இதனால் ராணுவத்திற்குச் செல்ல ஆர்வமுள்ள இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும்; ஆகவே நிலுவையில் உள்ள எழுத்துத்தேர்வை உடனடியாக நடத்தக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இவர்களிடம் காவல் துறையினர் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இளைஞர்கள் கலைந்து சென்றனர். இருந்தபோதும் அடுத்த கட்டமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட இருப்பதாகவும் கூறினர்.
வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தே ராணுவத்துக்கு அதிக ஆள்கள் செல்வது குறிப்பிடத்தக்கது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கூறுகையில், 'ராணுவத்தில் சேர்வதை நாங்கள் பணியாகப் பார்க்கவில்லை. எங்கள் கனவாகப் பார்க்கிறோம். அதைப் பறிக்க பார்க்கிறார்கள். "அக்னி பாத்" திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஆள் எடுக்கப்பட்டது.
நாங்கள் வயதை தொலைத்துவிட்டு என்ன செய்வது. இந்த "அக்னி பாத்" திட்டம் ராணுவ அலுவலகப் பணிக்கு செல்வோருக்கு பொருந்தாது. இதிலும் பாகுபாடு பார்க்கப்படுகிறது. 2019-ல் நடந்த உடல் தகுதித்தேர்வு முடித்து, இப்போது வரை காத்துக்கொண்டிருக்கிறோம். பல பேருக்கு வயது கடந்துவிட்டது. இதனால் சிலர் உயிரிழந்தும் உள்ளார்கள். ஆகவே, அரசு இவற்றை மறு பரிசீலனை செய்ய வேண்டும்' என்று கூறினர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் செல்லும் போது காவலரின் மனைவியிடம் செயின் பறிப்பு!!