வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் நளினி தற்போது பரோலில் காட்பாடியில் உள்ள தனது தாய் பம்மாவுடன் தங்கியுள்ளார். இந்நிலையில், இதே வழக்கில் வேலூர் மத்திய சிறையிலுள்ள தனது கணவன் முருகனை இன்று (மே 20) நேரில் சென்று சந்தித்துப் பேசினார்.
இதற்காக நளினி தங்கியுள்ள காட்பாடி பிரம்பபுரம் பகுதியில் இருந்து பலத்த காவல் துறை பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டார். இது 15 நாள்களுக்கு ஒரு முறை நடக்கும் வழக்கமான சந்திப்பு ஆகும். மேலும் முருகன் தனக்கு 6 நாள் பரோல் வழங்க கோரி இன்றோடு 20ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
மேலும் முருகன் சிறையின் அனுமதியின்றி 2020ஆம் ஆண்டில் வீடியோ கால் பேசிய வழக்கின் தீர்ப்பு வரும் 24ஆம் தேதி வேலூர் நீதிமன்றத்தில் வரவுள்ளது. மேலும் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த, பேரறிவாளன் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்களின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சுமார் அரை மணி நேர சந்திப்புக்குப் பிறகு நளினி மீண்டும் காட்பாடி அழைத்துச்செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: லாலு பிரசாத்துக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை