வேலூர் மாவட்டம், குருமலை கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வந்தத் தகவலை அடுத்து, அரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன், காவலர்கள் யுவராஜ், இளையராஜா ஆகியோர் சோதனையிடச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து, சாராய வியாபாரிகளான செல்வம், இளங்கோ ஆகியோரது வீட்டில் நடத்திய சோதனையின்போது 15 சவரன் தங்க நகை, 8.5 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை காவல் துறையினர் எடுத்துச் சென்றுவிட்டடாக பொதுமக்கள் முன்னதாக புகார் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் வேலூர் மாவட்ட உதவிக் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் விசாரணை நடத்தினார்.
பின்னர் மூவர் மீதும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில் தற்போது காவலர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு, வேலூர் மாவட்ட நீதித்துறை நடுவர் எண்.1 நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். பின்னர் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் தொரப்பாடியில் உள்ள வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க : கழுகுமலையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான புகையிலை பறிமுதல்: ஒருவர் கைது