வேலூர்: வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்ற 2ஆம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வில் 1,059 பேர் உடற்தகுதி தேர்வுக்கு தகுதி பெற்றனர்.
முதல் கட்ட உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 2-வது கட்டமாக வருகிற 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை 2ஆவது கட்ட உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று (பிப். 9) 2ஆம் நிலை காவலர்களுக்கான கயிறு எறுதல், 400 மீ ஓட்டப்பந்தயம் மற்றும் நீளம் தாண்டுதல் போன்ற உடற்தகுதி தேர்வு, மாவட்ட காவலர் நேதாஜி மைதானத்தில் இன்று தொடங்கியது.
இந்த காவலர் தேர்வில் பங்கேற்க வருவோர் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கருவிகள் எதையும் தேர்வு வளாகத்துக்கு எடுத்துவரக் கூடாது. நகைகள் அணிந்து வரக் கூடாது. சான்றிதழ்களை தங்களின் சொந்த கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். இருசக்கர வாகனங்களில் வருவோர் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும். முகக்கவசம் உள்ளிட்ட கரோனா தடுப்பு விதிமுறைகளையும், தேர்வு விதிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தேர்வில் பங்கேற்பவர்கள் உரிய அனுமதி பெறாமல் வளாகத்தில் இருந்து வெளியேறக் கூடாது. அதேபோல, தேர்வில் பங்கேற்க வரும் விண்ணப்பதாரர்கள் கட்சிகள், அமைப்புகள், பயிற்சி மையங்கள் போன்றவை சார்ந்த வண்ணங்கள் மற்றும் வாசகங்கள் இடம்பெற்ற உடைகளை அணிந்து வரக் கூடாது என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.