வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மாசாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்குச் சொந்தமான இடத்தில் மின்சாரத் துறை சார்பில் மின்மாற்றி (transformer) வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த மின்மாற்றியை தனக்குச் சொந்தமான இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றக் கோரி மின்சாரத் துறை அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் மின்சாரத் துறை அதிகாரி மின்மாற்றியை வேறு இடத்தில் மாற்ற வேண்டும் என்றால் இரண்டு லட்ச ரூபாய்க்கு மேலாகும் எனவும் இந்த வேலையைச் செய்ய வேண்டும் என்றால் தனக்கு கமிஷன் வழங்க வேண்டும் என்று ஆற்காடு மின்சாரத் துறை அலுவலகத்தில் பணிபுரியும் உதவி இயக்குநர் தனலட்சுமி கேட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தன்னால் பணத்தைத் தர முடியாது எனக்கூறிய கோவிந்தராஜ் தன்னுடைய மனுவைத் திரும்பக் கொண்டு வந்துள்ளார். பின்னர், மின்சாரத் துறை அலுவலகத்தில் இயக்குநர் தனலட்சுமி பணத்தைக் கேட்டதை செல்போனில் பதிவு செய்ததை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தனலட்சுமியின் கணவர் கோவிந்தராஜை மிரட்டுவதாகக் கூறப்பட்ட நிலையில் வேலூர் சரக டிஐஜியிடம் மனு அளித்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த கோவிந்தராஜ் கூறுகையில், "இயக்குநர் தனலட்சுமியின் கணவர் தன்னையும் தன் தந்தையையும் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று மாதங்களாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மற்றும் ஆற்காடு நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
மேலும், ஆற்காடு நகரக் காவல் நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட எனக்குச் சாதகமாகப் பேசாமல் மின்சாரத் துறை அதிகாரி என்பதால் அவர்களுக்குச் சாதகமாகவே அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும் அதைத் தொடர்ந்து இன்று வேலூர் சரக டிஐஜி முத்துசாமியிடம் எனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டும்.
உதவி இயக்குநர் தனலட்சுமி கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஒரு தலை பட்சமாகச் செயல்படும் ஆற்காடு நகரக் காவல் நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்திருப்பதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாளை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் விநியோகம்!