வேலூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட சைதாப்பேட்டை, சேண்பாக்கம், சலவன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 5 மாதங்களுக்கு முன்பாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
ஐந்து மாதங்களான நிலையில், இதுவரை குடும்ப அட்டை வழங்கவில்லை என்றும் உடனே வழங்க கோரியும் வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஆரணி சாலையில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் இன்று(மே. 10) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விதிமுறைகளை பின்பற்றாமலும் தகுந்த இடைவெளியின்றியும் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சம்பந்தப்பட்ட மக்கள் குவிந்ததால் அலுவலர்கள் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
மாவட்ட, வட்ட வழங்கள் அலுவலர்களிடம் பேசி ஒரு மாதத்தில் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.