வேலூர்: வேலூர் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி. சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் இறந்து நிலையில், இவரது மனைவி ராதாம்மாள்(71) தனித்து வசித்து வந்தார். இவர்களுக்கு ஜெயக்குமார் என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். கடந்த 24 ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த ராதாம்மாளை, அங்கு வந்த இளைஞர் ஒருவர் கடுமையாகத் தாக்கிவிட்டு, அவரது மூக்குத்தியையும் பறித்துக்கொண்டு தப்பி ஓட முயற்சி செய்துள்ளார்.
இதனை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட அந்த இளைஞரைத் தேடி வந்த நிலையில், ஆற்காடு சாலை தனியார் மருத்துவமனை அருகே அடையாளம் கண்டுள்ளனர். பின்னர் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இளைஞர் தாக்கியதில் பலத்த காயமடைந்த ராதம்மாளை, மகன் ஜெயக்குமார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் வெள்ளிக்கிழமை வடக்கு காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்கச் சென்ற போது அங்கு ஒப்படைக்கப்பட்ட இளைஞர் காணவில்லை எனத் தெரிய வந்துள்ளது. மேலும், அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "பன்னீங்க தான் கூட்டமா வரும்; சிங்கம் சிங்கிளா தான் இருக்கும்" - பஞ்ச் உடன் அரசியல் பேசிய தருமபுரம் ஆதீனம்!
பின்னர் புகார் மனுவைக் கொடுத்துவிட்டு ஜெயக்குமார் அங்கிருந்து சென்றுள்ளார். இந்த நிலையில், ராதாம்மாள் சனிக்கிழமை காலை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வடக்கு போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி உடற் கூராய்விற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் தொடர்ச்சியாக, ராதம்மாளை தாக்கி கொலை செய்த இளைஞரைக் காவல் துறை கைது செய்ய வலியுறுத்தி காகிதப்பட்டறையை சேர்ந்த பொதுமக்கள் ஆற்காடு சாலையில் இன்று மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேலூர் வடக்கு காவல் துறையினர், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மறியலில் ஈடுபட்டவர்கள் காவல் துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். பொது மக்களின் மறியல் காரணமாக வேலூர் ஆற்காடு சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சென்னையில் 4வயது சிறுவன் நீச்சல் குளத்தில் முழ்கி உயிரிழப்பு... முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!