வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த நரியம்பட்டு கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. ஆனால், வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரிப்பது குறித்து அரசாணை வெளியிடப்பட்டதால், நரியம்பட்டு பகுதியில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையம் திருப்பத்தூர் மாவட்டத்திற்குள் வந்துவிடும்.
இதனால், பேராணாம்பட் ஒன்றியத்திற்கு உட்பட்டுச் செயல்பட்டு வந்த சுகாதார நிலையமானது, வேலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டதால் ஒன்றியத்திற்கு ஓர் தலைமை மருத்துவமனை இருக்கும் காரணத்தினால் நரியம்பட்டு பகுதியில் இயங்கி வரும் மருத்துவமனை 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாதனூர் பகுதியில் அமையும் என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவமனையை மாற்றக்கூடாது எனச் சுகாதார நிலையம் முன் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர், சுகாதார நிலையம் தலைமை மருத்துவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, மருத்துவமனையை மாற்றுவதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை, அதற்கான அறிவிப்பு தங்களுக்கு இன்னும் வரவில்லையென்று என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: பேத்தியின் பிறந்தநாள் விழாவிற்குச் செல்லும் போது விபத்து - பாட்டி உயிரிழப்பு!