கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் பகுதியில் ராஜன் என்பவருக்குச் சொந்தமான மிச்சர் தயாரிப்பு மற்றும் விற்பனை கடை ஊரடங்கு விதியை மீறி செயல்பட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அலுவலர்கள், ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்ததற்காக கடை உரிமையாளர் ராஜனிடம் 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து, கடைக்கு சீல் வைத்தனர்.
அதேபோல் காட்பாடி காந்தி நகர் பகுதியில் முழு ஊரடங்கை மீறியும், தகுந்த இடைவெளியின்றியும் இறைச்சி கடை செயல்படுவதாக மாநகராட்சி அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி காவல்துறை, மாநகராட்சி அலுவலர்கள் விரைந்தனர்.
அலுவலர்கள், காவல் துறையினர் வருவதை அறிந்த கடை உரிமையாளர் கடையை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனையடுத்து காவல்துறை சார்பில் ஒரு பூட்டும், மாநகராட்சி தரப்பில் ஒரு பூட்டும் என இரு பூட்டுக்கள் போடப்பட்டு கடை சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து தப்பியோடிய கடை உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கருக்கலைப்பு மருந்தால் உயிருக்குப் போராடிய பெண்: மருந்துக் கடைக்குச் சீல்வைப்பு