வேலூர்: பரசுராமன்பட்டி குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்த வட மாநில இளைஞரை பிடித்த அப்பகுதி பொதுமக்கள், அவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து, பின்பு காவல் துறையினரிடம் ஒப்படைத்து உள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரசுராமன்பட்டி பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் பரசுராம்பட்டி பகுதி குடியாத்தம் ரயில் நிலையத்தை ஒட்டி இருப்பதால், வட மாநில இளைஞர்கள் குடியாத்தம் ரயில் நிலையத்தில் இறங்கி, அப்பகுதியில் சுற்றித்திரிந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நேற்று (ஆகஸ்ட் 29) இரவு பரசுராம்பட்டி பகுதியில் உள்ள குடியிருப்புகளில் கதவுகளை தட்டியும், கட்டையைக் கொண்டு மிரட்டியும், வட மாநில இளைஞர் ஒருவர் அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, இன்று (ஆகஸ்ட் 30) குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ஒருவரது வீட்டுக்குள் வட மாநில இளைஞர் ஒருவர் நுழைந்து உள்ளார்.
பின்னர், அந்த வட மாநில இளைஞரை அப்பகுதி மக்கள் பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து உள்ளனர். இதனையடுத்து இது குறித்து குடியாத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: ஆசை வார்த்தையால் திகார் சிறை அதிகாரிக்கு பறிபோன ரூ.51 லட்சம்!
பின்னர் இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் காவல் துறையினர், அந்த வட மாநில இளைஞரை மீட்டு விசாரணை நடத்தினார். விசாரணையில், குடியிருப்பு வீட்டுக்குள் நுழைந்த அந்த நபர், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் என்பது தெரிய வந்து உள்ளது. பின்னர், அவரை குடியாத்தம் காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று உள்ளார். மேலும், அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, பரசுராமன்பட்டி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து வீடுகளில் திருடு போன சம்பவத்தைத் தொடர்ந்து வட மாநில இளைஞர்கள் சுற்றித் திரிவதால் அப்பகுதியில் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதற்கு அச்சமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும், குடியிருப்பு வீட்டிற்குள் நுழைந்த வட மாநில இளைஞர் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: "குடும்ப தலைவிகளுக்கான ரூ.2000 உதவி தொகை விரைவில் தொடக்கம்" - முதலமைச்சர் சித்தராமையா!