வேலூர்: ஆண்டுதோறும் சித்திரை மாத பௌர்ணமி தினத்தில் வேலூரில் புஷ்ப பல்லக்குகள் பவனி வரும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நடப்பு ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி, புஷ்ப பல்லக்குகள் ஊர்வலம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது.
இந்த விழாவில் அரிசி மண்டி உரிமையாளர்கள் சார்பில் சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில் புஷ்ப பல்லக்கு, வெல்லமண்டி உரிமையாளர்கள் சார்பில் தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் கோயில் புஷ்ப பல்லக்கு, பூ மார்க்கெட் தொழிலாளர்கள் சார்பில் லாங்கு பஜார் வேம்புலி அம்மன் கோயில் புஷ்ப பல்லக்கு, மோட்டார் வாகன பணியாளர்கள் சங்கம் சார்பில் விஷ்ணு துர்க்கை அம்மன் கோயில் புஷ்ப பல்லக்கு, வாணியர் வீதி சுந்தர விநாயகர் கோயில் புஷ்ப பல்லக்கு, புஷ்ப கமிஷன் வியாபாரிகள் சார்பில் வேம்புலியம்மன் கோயில் புஷ்ப பல்லக்கு, புஷ்ப தொழிலாளர்கள் சார்பில் அரசமரப்பேட்டை லட்சுமி நாராயண சுவாமி கோயில் புஷ்ப பல்லக்கு உள்பட 9 புஷ்ப பல்லக்குகள் ஊர்வலத்தில் பங்கேற்றன.
கோயில்களில் இருந்து புறப்பட்ட இந்த புஷ்ப பல்லக்குகளில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர். இந்த பல்லக்குகள் நள்ளிரவில் மண்டித் தெருவை வந்தடைந்தன. தொடர்ந்தும் அங்கு வான வேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் மெயின் பஜார், லாங்கு பஜார், அண்ணா சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் அந்தந்த கோயில்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
மின்னொளி அலங்காரத்தில் நடைபெற்ற இந்த புஷ்ப பல்லக்குகள் ஊர்வலத்தைக் காண ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். மேலும், சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: சித்ராபௌர்ணமி முழுநிலவு திருவிழா: பச்சை பட்டுடுத்தி அருள்பாலித்த கண்ணகி தேவி!