வேலூர்: அடுக்கம்பாறை பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் சுந்தர் என்பவரின் மனைவி சூரியகலா பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். சூரியகலா, காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாதவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சூரியகலாவுக்கு பிற்பகல் 2 மணி அளவில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் பிரசவ வார்டில் இருந்த சூரிய கலாவுக்கும், அவரது பிறந்த குழந்தைக்கும் 40 வயதுமிக்க பெண்மணி ஒருவர் தொடர்ந்து உதவி செய்து வந்துள்ளார். அதைத் தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 19) அந்த பெண் சூரியகலாவிடம் இருந்து குழந்தையை தாருங்கள் வெளியே உள்ள தங்களுடைய உறவினர்களிடம் காட்டி விட்டு வருகிறேன் என்று வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது.
அதனையடுத்து, குழந்தையை வாங்கிச் சென்ற அந்த அடையாளம் தெரியாத பெண் திரும்பி வரவில்லை எனக் கூறப்படுகிறது. குழந்தையை எடுத்துச் சென்ற பெண் வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம் இதுகுறித்து தகவல் அளித்தனர். பின்னர் வேலூர் தாலுகா காவல் நிலையத்திற்கு குழந்தை காணாமல் போனது குறித்த புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை, மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சி பதிவை வைத்து காவல்துறையினர் தேடி வந்தனர். சிசிடிவி காட்சியில் குழந்தையை கடத்திச் சென்ற அந்த பெண்மணி திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பின் போலீசார் திருவண்ணாமலைக்கு விரைந்ததுடன், அருகில் இருந்த காவல் நிலையங்களுக்கும் தகவல் அளித்துள்ளனர். பின்னர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குழந்தையை தொடர்ந்து தேடி வந்த நிலையில் அந்த பெண், குழந்தையுடன் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து இறங்கி காஞ்சிபுரம் பேருந்தில் ஏறியது தெரியவந்தது.
இதையடுத்து காஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடத்தப்பட்ட குழந்தையுடன் அந்தப் பெண் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், சென்னை பேருந்தில் ஏற முயன்ற போது கையும் களவுமாக போலீசார் பிடித்தனர். பின்னர் அங்கிருந்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு அந்த பெண்ணை குழந்தையுடன் போலீசார் அழைத்து வந்தனர்.
குழந்தை மீண்டும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் கடத்திய பெண்ணின் பெயர் பத்மா (40) என்பதும் அவர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. குழந்தை கடத்தபட்டு 9 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். மேலும், வேலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மான் வேட்டையாடிய 2 நபர் கைது... வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை!